Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திரும்பி பார்ப்போம்... கடும் சவால்கள், தடைகளை கடந்து பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இந்தியா மாறியது எப்படி?
2020ம் ஆண்டு இந்தியாவில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட மிக கடுமையான விதிமுறைகளில் ஒன்று பிஎஸ்-6. இந்திய ஆட்டோமொபைல் துறை சந்தித்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று என இதனை கூறலாம். பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிமுறைகளில் இருந்து பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு மாறியதில் ஆட்டோமொபைல் துறை பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. இது அவசியமான மாற்றம் என்றாலும் கூட, ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இவை எல்லாம் தொடங்கியது கடந்த 2000ம் ஆண்டில்தான். அப்போதுதான் பாரத் ஸ்டேஜ் எனப்படும் மாசு உமிழ்வு விதிமுறைகளை இந்திய அரசு அறிமுகம் செய்தது. ஐரோப்பிய மாசு உமிழ்வு விதிமுறைகளின் அடிப்படையில், இந்த உமிழ்வு தரநிலைகள் வகுக்கப்பட்டன. பிஎஸ் மாசு உமிழ்வு விதிமுறைகள் வாகனங்களுக்கானது மட்டும் கிடையாது. எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் அனைத்து உபகரணங்களுக்கும் இது பொருந்தும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்திய அரசும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாசு உமிழ்வு விதிமுறைகளை திருத்தியமைக்க முடிவு செய்தன. இதன் விளைவாக கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஎஸ்-3 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன.

அதன்பின் பிஎஸ்-5 மாசு உமிழ்வு விதிமுறைகளை தவிர்த்து விட்டு, 2020ம் ஆண்டு முதல் நேரடியாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு மாறுவது என கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. இதற்கான காலக்கெடுவாக 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டது. 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு, அனைத்து தயாரிப்புகளும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டது.

இந்த மாற்றத்திற்கு உதவும் வகையில், காலக்கெடுவிற்கு முன்னதாக நாடு முழுவதும் பிஎஸ்-6 எரிபொருட்களை கிடைக்க செய்யும்படி, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. ஒரு சில வாகன நிறுவனங்கள், ஆரம்பத்திலேயே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான தயாரிப்புகளை களமிறக்க தொடங்கி விட்டன. ஆனால் இன்னும் சில நிறுவனங்கள், காலக்கெடு நெருங்கி கொண்டிருந்த சமயத்தில், கைவசம் இருந்த பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்து விடுவதில் ஆர்வம் காட்டின. ஆனால் ஏற்கனவே கூறியபடி பிஎஸ்-4 விதிமுறைகளில் இருந்து பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு சுமூகமாக மாறுவதை ஏராளமான காரணிகள் பாதித்தன.

முதலில் வாகன உற்பத்தி நிறுவனங்கள், கூடுதல் பாகங்களை பயன்படுத்துவதன் மூலம், தங்களது தயாரிப்புகளை பசுமையானதாக மாற்ற வழியை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக வாகனங்களின் உற்பத்தி செலவுகள் அதிகரித்தன. அதே நேரத்தில் இந்தியாவில் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள், ஆட்டோமொபைல் தொழில் துறையில் நடைபெறவுள்ள இந்த மாற்றத்தை புரிந்து கொண்டனர். எனவே புதிய வாகனங்களை வாங்குவதை அவர்கள் தற்காலிகமாக தள்ளி வைத்தனர். இதன் காரணமாக அனைத்து செக்மெண்ட்களிலும், அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் குறைந்தது. இந்திய ஆட்டோமொபைல் துறை சந்தித்த மிகப்பெரிய சரிவுகளில் ஒன்றாக இது பதிவானது.

உற்பத்தியில் இப்படி சவால்கள் வரக்கூடும் என்பதையும், விற்பனையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம் என்பதையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்கூட்டியே ஓரளவிற்கு கணித்திருந்தன. ஆனால் கொரோனா என்னும் பூதம் கிளம்பும் எனவும், இதன் காரணமாக ஒட்டுமொத்த தேசம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்கவில்லை. ஊரடங்கு காரணமாக நாட்டில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியிருந்த சமயத்தில், சத்தமே இல்லாமல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் இந்தியாவில் அமலுக்கு வந்தன.

மிகவும் கடுமையான இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக கைவசம் இருந்த பிஎஸ்-4 வாகனங்களை கடைசி நேரத்தில் டீலர்களால் விற்பனை செய்ய முடியாமல் போனது. அவை ஷோரூம்களில் தேக்கமடைந்தன.

எனவே கைவசம் இருந்த பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு உதவுமாறு, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA - Federation of Automobile Dealers Association) சார்பில், அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொரோனா தொற்று நோய் காரணமாகவும், அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், 10 நாட்களுக்கு பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு, கடந்த மார்ச் 27ம் தேதி அனுமதி வழங்கியது.

எனினும் கையிருப்பில் உள்ள பிஎஸ்-4 வாகனங்களில் 10 சதவீதத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்பட்ட காலகட்டத்தில், டீலர்கள் 10 சதவீதத்திற்கும் மேலான பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்து விட்டதாக உச்ச நீதிமன்றம் கூறியது. அதனை தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் கிளம்பின. இது தொடர்பாக பல மாதங்களாக நீடித்த வாதங்களுக்கு பிறகு இறுதியில், ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பிற்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வரிகளை செலுத்திய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்ட அதே நேரத்தில், இந்திய சந்தையில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது. பிஎஸ்-6 விதிகளுக்கு மாறுவதன் ஒரு பகுதியாக ஒரு சில முன்னணி நிறுவனங்கள் சிறிய டீசல் இன்ஜின்களை விற்பனையில் இருந்து விலக்கி விட்டன. சிறிய டீசல் இன்ஜின்களை, பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமாக மேம்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதே இதற்கு காரணம். இதன் விளைவாக சிறிய டீசல் இன்ஜின்கள் சந்தையில் இருந்து வெளியேறின.

டீசல் இன்ஜின்களை கைவிட்ட நிறுவனங்களில் மாருதி சுஸுகி முக்கியமானது. பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், மாருதி சுஸுகி நிறுவனம் தனது அனைத்து கார்களிலும் டீசல் இன்ஜின் தேர்வுகளை நிறுத்தி விட்டது. தற்போது டீசல் இன்ஜின் கொண்ட கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்வதில்லை. பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், டீசல் இன்ஜின்களுக்கான தேவை குறையும் என பெரும்பாலான ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கணித்தனர். அதாவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அவை செல்வாக்கை இழந்து விடும் என கூறப்பட்டது. ஆனால் இந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையில், இந்தியாவில் டீசல் இன்ஜின்களுக்கான தேவை இன்று வரை வலுவாக உள்ளது.

ஹூண்டாய், கியா, எம்ஜி, மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் கார்களில் டீசல் இன்ஜின்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. தற்போது நிலையில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு முழுமையாக மாறி விட்டன. அந்த நிறுவனங்களுடைய தயாரிப்புகளின் பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இன்னமும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு முழுமையாக மாறவில்லை. இந்த நிறுவனங்களுடைய தயாரிப்புகளின் பிஎஸ்-6 வெர்ஷன்கள் இன்னும் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை.

இனி இரு சக்கர வாகனங்களுக்கு வருவோம். நான்கு சக்கர வாகனங்களுடன் ஒப்பிடும்போது இரு சக்கர வாகனங்கள் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு மாறுவது சுமூகமாக நடைபெற்றுள்ளது என்றே சொல்லலாம். டீசல் இன்ஜின்களை காட்டிலும், பிஎஸ்-4 பெட்ரோல் இன்ஜின்களை, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக மேம்படுத்துவது மிகவும் எளிது என்பதுதான் இதற்கு காரணம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், அனைத்து நிறுவனங்களும் எந்த பிரச்னையும் இல்லாமல், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு மாற வேண்டும் என்றுதான் விரும்பின. ஆனால் நடைமுறையில் ஆட்டோமொபைல் துறைக்கே இது பெரும் சவாலாகவும், கடினமானதாகவும் இருந்தது. போதாக்குறைக்கு கொரோனா வைரஸ் பிரச்னையும், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு மாறுவதில் பெரிய தடைக்கல்லாக இருந்தது. எப்படியோ ஒரு வழியாக பிஎஸ்-6 விதிமுறைகள் என்ற மிகப்பெரிய மாற்றத்தை இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறை சந்தித்து விட்டது. அத்துடன் அனைத்தும் படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதையும் தற்போது நம்மால் காண முடிகிறது.