666 கிமீ ரேஞ்ச்... துளி மாசு கிடையாது.. விரைவில் இந்தியா வருகிறது ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் கார்!

ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கார் மாடலாக இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஹைட்ரஜன் எரிபொருள் வகை காருக்கான அனுமதியை ஹூண்டாய் பெற்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காரின் அசரடிக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 விரைவில் இந்தியா வருகிறது ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் கார்!

பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. இதற்காக, மாற்று எரிபொருள் வாகனங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசும், வாகன நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கு மின்சார வாகனங்களே ஆகச் சிறந்த தீர்வாக இருப்பதால், தொடர்ந்து மின்சார வாகனங்களை களமிறக்குவதில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை களமிறக்குவதிலும் பல்வேறு வாகன நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில் ஹைட்ரஜன் வாகனங்களை களமிறக்குவதற்கான வாய்ப்புகள் நெருங்கி உள்ளன.

முதல் ஹைட்ரஜன் கார்?

ஆம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார் தயாரிப்பில் பிரபலமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் விரைவில் தனது நெக்ஸோ ஹைட்ரஜன் காரை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹைட்ரஜனில் இயங்கும் வாகன வகைக்கான அனுமதியையும் மத்திய அரசிடம் ஹூண்டாய் பெற்றுவிட்டதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி மூலமாக தெரிய வந்துள்ளது.

மின்சார கார்களைவிட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்கள் சில முக்கிய அனுகூலங்களை பெற்றுள்ளது. அதாவது, மின்சார வாகனங்களின் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கு பல மணிநேரம் பிடிக்கும் நிலையில், ஹைட்ரஜன் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு சில நிமிடங்களே போதுமானது. இது மிகப்பெரிய சாதகமான விஷயமாக இருக்கும்.

துளி மாசு இருக்காது...

அதேபோன்று, வாகனத்தின் புகைப்போக்கி குழாயிலிருந்து கழிவாக நீர் அல்லது நீராவி மட்டுமே வெளிப்படும். இதனால், சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாக வாகன வகையில் இடம்பெறும்.

ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் கார் மாடலானது எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. இந்த கார் 4,670 மிமீ நீளமும், 1,860 மிமீ அகலமும், 1,630 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2,790 மிமீ வீல்பேஸ் நீளம் பெற்றிருப்பதால், சிறப்பான உட்புற இடவசதியை அளிக்கும்.

ஹைட்ரஜன் எரிபொருளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இந்த கார் மின் மோட்டாரில் இயங்கும். எனவே, இது மின்சார வகை கார் மாடல் போன்றே இதன் செயல்திறன் அமைந்துள்ளது. அதாவது, இந்த காரின் மின் மோட்டார் 161 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 9.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 179 கிமீ வேகம் வரை செல்லும்.

ஹூண்டாய் நெக்ஸோ இன்டீரியர்

இந்த காரில் 95kW திறன் கொண்ட ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் கட்டமைப்பும், 40kW திறன் கொண்ட பேட்டரியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் எரிபொருள் கலனில் இருக்கும் ஹைட்ரஜன் அடுத்து ஃப்யூவல் செல் எனப்படும் கட்டமைப்புக்கு செலுத்தப்படும். அங்கு விசேஷ சவ்வு மூலமாக வெளிக்காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனுடன் சேரும்போது, மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.

எவ்வளவு தூரம் போகலாம்?

இந்த மின்சாரத்தின் மூலமாக மின்மோட்டார்கள் இயக்கப்பட்டு சக்கரங்களுக்கு தேவையான உந்து சக்தி கொடுக்கப்படும். இந்த காரில் உள்ள எரிபொருள் கலனில் முழுமையாக ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பினால் சோதனை நிலை கணக்குகளின்படி 666 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்குமாம். நடைமுறையில் 550 முதல் 600 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த ஹைட்ரஜன் கார் நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

அதேநேரத்தில், ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்கள் அதிக அளவில் அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவ்வாறான எரிபொருள் நிலையங்கள் கட்டமைப்பு வரும்பட்சத்தில், இந்த ஹைட்ரஜன் கார்களுக்கு வரவேற்பு கிடைக்கலாம். ஹைட்ரஜன் மிக அதிக அழுத்தத்தில் எரிபொருள் கலனில் வைக்க வேண்டி இருப்பதால், அது வெடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது இதன் மிக முக்கிய பாதக அம்சமாக உள்ளது.

ஹூண்டாய் நெக்ஸோ திறன்

புதிய ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் காரில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 8 ஸ்பீக்கர்களுடன் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் இருக்கைகள், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான உணர்வை வழங்கும் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை?

புதிய ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் கார் மாடலானது இந்தியாவில் பிரிமீயம் வகை எஸ்யூவி காராக நிலைநிறுத்தப்படும். இந்த கார் இறக்குமதி செய்து விற்பனைக்கு வரும் என்பதால், ரூ.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்திய பகுதிகள் மற்றும் பெரு நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

இந்த காருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்து, ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தால், டொயோட்டா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்களும் இந்தியாவில் ஹைட்ரஜன் கார்களை களமிறக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மின்சார கார்களைவிட இந்த கார்களில் பல சாதகமான விஷயங்கள் உள்ளதால், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதன் மீதான நம்பகத்தன்மை எந்தளவுக்கு இந்தியர்கள் மத்தியில் எடுபடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
According to report, Hyundai has received fuel type approval for the Nexo fuel cell car in India.
Story first published: Wednesday, March 10, 2021, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X