மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிப்பு!
கொரோனா அதிகரித்து வரும் இந்த நேரத்தில், வாகன உரிமையாளர்கள் நலன் கருதி, மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு மீண்டும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தேசிய அளவில் ஊரடங்கு போடப்பட்டது. இதனால், அரசு அலுவலங்களின் பணிகள் முடங்கின. இதனை மனதில் வைத்து பல்வேறு சேவைகளுக்கும், ஆவணங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றிற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில், வாகன உரிமையாளர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் நலன் கருதி, மோட்டார் வாகன ஆவணங்களுக்கு தொடர்ந்து தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், டிரைவிங் லைசென்ஸ், பதிவுச் சான்று புதுப்பிப்பு உள்ளிட்டவற்றிற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மோட்டார் வாகனங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 31ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அதன்படி, வரும் 31ந் தேதிக்குள் காலாவாதியாகும் மோட்டார் வாகன ஆவணங்களை வரும் ஜூன் 30ந் தேதிக்குள் புதுப்பிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவும் அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக இந்த கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் 1989 ஆகிய பிரிவுகளில் அடங்கும் மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கு இந்த கால அவகாசம் பொருந்தும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








