மின்சார கார் தயாரிப்பில் இறங்கும் ஸியோமி... 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டம்

ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான ஸியோமி நிறுவனம் மின்சார கார் தயாரிப்பிலும் இறங்க உள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மின்சார கார் தயாரிப்பில் இறங்கும் ஸியோமி!

உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் உள்ள நிறுவனங்களும், ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் உள்ள பிரபலமான நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பிலும் இறங்குவது வழக்கமான விஷயமாகி விட்டது. அந்த வகையில், சீனாவில் கூகுள் தேடுபொறி போன்ற சேவையை வழங்கி வரும் பாய்டு நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பில் இறங்க உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து, ஹூவாய் டெக்னாலஜீஸ் நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியில் இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான சீனாவை சேர்ந்த ஸியோமி, மின்சார வாகன உற்பத்தியில் இறங்க உள்ளது. இதற்காக, ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வெஹிக்கிள் யூனிட் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ஸியோமி துவங்கி இருக்கிறது.

ஸியோமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன்தான் புதிய ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வெஹிக்கிள் நிறுவனத்திற்கும் சிஇஓ.,வாக செயல்பட உள்ளார். இதனால், இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் குறித்து உலகின் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது.

இந்த புதிய நிறுவனத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகப் பிரிவு செயல்படும். முதல்கட்டமாக 1.52 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மின்சார கார் தயாரிப்புப் பணிகள் துவங்கப்பட உள்ளது. மேலும், தனது மின்சார கார் உற்பத்திப் பணிகளுக்காக, அடுத்த 10 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் ஸியோமி தெரிவித்துள்ளது.

மலிவு விலையில் அசத்தலான தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்மார்ட்ஃபோன் சந்தையை கிடுகிடுக்க வைத்தது போலவே, மின்சார வாகன சந்தையையும் ஒரு கை பார்க்க ஸியோமி திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது மின்சார வாகனங்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஸியோமி திட்டமிட்டுள்ளது. ஆனால், எந்த வகையான மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன என்ற விபரம் இதுவரை தெரிய வில்லை. இதுகுறித்து விரைவில் பல முக்கிய விபரங்களை ஸியோமி வெளியிடும் என்று தெரிகிறது.

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது மின்சார கார்களை உற்பத்தி செய்ய ஸியோமி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், ஸியோமி மின்சார காரை தயாரித்து வெளியிட்டால், அது நிச்சயம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால், மின்சார கார் துறையினரும், வாடிக்கையாளர்களும் ஸியோமி நிறுவனத்தின் மின்சார கார் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளனர்.

Most Read Articles

English summary
Chinese smartphone maker Xiaomi has announced to enter electric vehicle business with 10 billion dollar investment in next 10 years.
Story first published: Wednesday, March 31, 2021, 10:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X