இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியால விற்பனைக்கு வரப்போகுதா! வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு!
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் ஒரு சில நிறுவனங்களில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனமும் ஒன்று. தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் என்ற எலெக்ட்ரிக் காரை (MG ZS EV) இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து கொண்டுள்ளது.
இந்த சூழலில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவில், எம்ஜி 4 எலெக்ட்ரிக் காரை (MG 4 EV), எம்ஜி மோட்டார் நிறுவனம் காட்சிக்கு வைக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருந்து வரும் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி 4 எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த கார் யூரோ என்சிஏபி (Euro NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை சமீபத்தில் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், லேன் கீப் அஸிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆக்டிவ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஹை பீம் அஸிஸ்ட் மற்றும் ஸ்பீடு லிமிட் அஸிஸ்ட் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது.
இந்த அட்டகாசமான பாதுகாப்பு வசதிகள் தவிர, ஓடிஏ அப்டேட்களுடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் மற்றும் முழு எல்இடி லைட்டிங் ஆகிய வசதிகளும் எம்ஜி 4 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் எம்ஜி 4 எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
அவை 51kWh மற்றும் 64kWh பேட்டரி தொகுப்புகள் ஆகும். இதில், 51kWh பேட்டரி தொகுப்பை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 350 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 64kWh பேட்டரி தொகுப்பை முழுமையாக நிரப்பினால், 452 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என எம்ஜி மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது. இவை சிறப்பான ரேஞ்ச் என்பதால், வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் 7kW AC சார்ஜரை பயன்படுத்தினால், 51kWh பேட்டரி தொகுப்பை 7.5 மணி நேரத்திலும், 64kWh பேட்டரி தொகுப்பை 9 மணி நேரத்திலும் முழுமையாக நிரப்பி விட முடியும். மறு பக்கம் 150kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், 51kWh பேட்டரி தொகுப்பை 35 நிமிடங்களிலும், 64kWh பேட்டரி தொகுப்பை 39 நிமிடங்களிலும் சார்ஜ் செய்து விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் காரும் (MG Air EV), ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களில் முதலில் எம்ஜி ஏர் எலெக்ட்ரிக் கார்தான் விற்பனைக்கு வரவுள்ளது.
அதற்கு பிறகுதான் எம்ஜி 4 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதற்கிடையே வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்ஜி ஹெக்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் (MG Hector Facelift) எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் கொண்டு வரவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








