ஆட்டோரிக்ஷாக்கள் பற்றி 'மீட்டருக்கு மேல்' தகவல்கள்!

Posted By:

நகர போக்குவரத்தின் தவிர்க்க முடியாத போக்குவரத்து சாதனம் ஆட்டோரிக்ஷா. சந்துபொந்துகளிலும் சிந்துபாடும் அடக்கமான வடிவமைப்பு, குறைவான வாடகை, எந்த இடத்திலும் கிடைக்கும் சவுகரியம், அட்ரஸ் இல்லா தெருவையும் அறிந்து வைத்திருக்கும் ஓட்டுனர்கள் போன்றவை ஆட்டோரிக்ஷாவுக்கு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாத வாடிக்கையாளர்கள் வட்டத்தை பெற்றிருக்கிறது.

ஆனாலும், ஆட்டோரிக்ஷா என்றவுடனே நமக்கு நினைவுக்கு வரும் சொல், ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்களின் மீட்டருக்கு மேல என்ன கொடுப்பீங்க என்ற வார்த்தைதான். ஆனால், அதனையும் தாண்டி ஆட்டோரிக்ஷாவை பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களையும், அதன் எதிர்காலம் பற்றியும் இந்த செய்தியில் காணலாம்.

01. ஆரம்பம்

01. ஆரம்பம்

மூன்று சக்கரத்துடன் அடக்கமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இன்று தவிர்க்க முடியாத போக்குவரத்து சாதனமாகி நிற்கும் ஆட்டோரிக்ஷாவிற்கு அடித்தளமிட்டது படத்தில் காணும் இந்த மினி பிக்கப் டிரக்தான். 1957ல் டைஹட்சூ நிறுவனத்தின் மிட்ஜெட் என்ற இந்த மூன்று சக்கர வாகனம்தான் ஆட்டோரிக்ஷாக்களுக்கு அடித்தளமிட்டது. 1960களிலிருந்து இன்றுவரை டைகட்சூவின் எம்4 மற்றும் எம்5 மாடல்கள் தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

 02. விதவிதமான பெயர்கள்

02. விதவிதமான பெயர்கள்

ஆட்டோரிக்ஷாக்கள் ஆசியா, ஐரோப்பா, மத்திய அமெரிக்கா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கரீபியன் நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். சமோசா, டக் டக், பேபி டாக்சி, ஆட்டோ, மோட்டோடாக்சி, லபா, டக்ஸி என்ற பெயர்களில் ஆட்டோ ரிக்ஷா அழைக்கப்படுகிறது. நம்மூரில் வழக்கமாக ஆட்டோ என்று கூப்பிடுகிறோம்.

03. முதலீட்டுக்கு ஏற்ற வருவாய்

03. முதலீட்டுக்கு ஏற்ற வருவாய்

ஆட்டோரிக்ஷாக்கள் இன்றுவரை தவிர்க்க முடியாத வர்த்தக வாகனமாக இருப்பதற்கு அதன் குறைவான விலையும் முக்கிய காரணம். இன்றைய தேதியில் ரூ.1.3 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் விலையில் ஆட்டோரிக்ஷாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முதலீடு குறைவுதான் என்றாலும், அதற்கான பெர்மிட் பெறுவது என்பது, குதிரை வாங்கி கொம்பு வாங்க முடியாத கதையாக இருக்கிறது.

 04. குதிரை கொம்பான பர்மிட்

04. குதிரை கொம்பான பர்மிட்

ஆட்டோரிக்ஷாவை வாங்கினாலும், அதற்கான பர்மிட் வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இந்த பர்மிட் பெறுவதற்கு ஓட்டுனர்களிடையே இருக்கும் போட்டியால், இதனை பெறுவதற்கு பல லட்சம் வரை லஞ்சமாக கொடுத்து பெறுகின்றனர். ரூ.12,000 முதல் ரூ.4.5 லட்சம் வரை ஆட்டோரிக்ஷா பெர்மிட்டுகளை வாங்க லஞ்சமாக கொடுக்க வேண்டியிருப்பதாக ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள் தெரிவிக்கினர்.

05. பர்மிட்டுக்கு லஞ்சம்

05. பர்மிட்டுக்கு லஞ்சம்

ஆனால், அந்த பர்மிட்டின் உண்மையான விலை என்ன தெரியுமா? வெறும் 375 ரூபாய்தான். அவ்வாறு லஞ்சம் கொடுத்து பெறப்படும் பெர்மிட்டுகளை பெறும் ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள், இழந்ததை பிடிக்க மீட்டருக்கு மேலே கேட்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அதாவது, டாக்டருக்கு படிக்கும்போது பல லட்சம் கொடுத்துவிட்டு, பின்னர் நோயாளியிடம் லட்சக்கணக்கில் பிடுங்குவதை போலத்தான் இங்கும் நிலை இருக்கிறது.

06. வருமானம்

06. வருமானம்

ஆட்டோரிக்ஷாக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதும், ரேடியோ டாக்சிகளின் சந்தைப் போட்டியும் பெரும் சவாலாக இருப்பதாக ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள் கூறுகின்றனர். மாதத்திற்கு சராசரியாக 15,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அதில், பராமரிப்பு செலவு, எரிபொருள் செலவு போன்றவற்றை கழித்தால் குடும்பத்தை நகர்த்துவதே கடினம் என்று பலர் குமுறுகின்றனர்.

 07. டாக்சிக்கு சிம்ம சொப்பனம்

07. டாக்சிக்கு சிம்ம சொப்பனம்

எத்தனையோ பிரச்னைகளை தாண்டி இன்றைக்கும் டாக்சி மார்க்கெட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இந்த ஆட்டோரிக்ஷாக்கள்தான். ஆட்டோரிக்ஷாக்களின் எண்ணிக்கை குறைந்தால், அது டாக்சி ஓட்டுனர்கள் ரேட்டை கணிசமாக உயர்த்துவதற்கு வழி வகுக்கும் அபாயம் இருப்பதாக ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள் கூறுகின்றனர்.

08. பஜாஜ் ஆட்டோ ரிக்ஷா

08. பஜாஜ் ஆட்டோ ரிக்ஷா

உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பஜாஜ் ஆட்டோதான். அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் பஜாஜ் ஆர்இ. இந்த ஆட்டோரிக்ஷாவின் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட மாடலில் 12 பிஎச்பி பவரையும், 13.2 என்எம் டார்க்கையும் வழங்கும் எஞ்சின் இருக்கிறது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

09. டிவிஎஸ் கிங்

09. டிவிஎஸ் கிங்

பஜாஜ் ஆட்டோவிற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட மாடல் டிவிஎஸ் கிங் ஆட்டோரிக்ஷா. இதுதொடர்பாக, டிவிஎஸ் நிறுவனத்தின் மீது பஜாஜ் ஆட்டோ காப்புரிமை பிரச்னை எழுப்பியது கூட நினைவிருக்கலாம். இந்த டிவிஎஸ் கிங் ஆட்டோரிக்ஷாவிலும் 200சிசி பெட்ரோல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிதபட்சமாக 7.38 பிஎச்பி பவரையும், 12.9 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இந்த ஆட்டோரிக்ஷா லிட்டருக்கு 20- 25 கிமீ மைலேஜ் தரும். மணிக்கு 65 கிமீ வேகம் வரை எட்டிப்பிடிக்க வல்லது.

10. எதிர்காலம்

10. எதிர்காலம்

ஆட்டோரிக்ஷாக்களின் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த நிலையில், இந்த ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக குவாட்ரிசைக்கிள் எனும் நான்கு சக்கர வாகனங்களை எதிர்காலத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முனைப்பு காட்டப்படுகிறது. இதிலும் முதலாவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் களமிறங்கி தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வருகிறது.

11. முட்டுக் கட்டை

11. முட்டுக் கட்டை

பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு தயாராக இருந்தாலும், பாதுகாப்பு அம்சங்களில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டி பல்வேறு கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகள், இந்த வாகனம் சாலையில் தடம்பதிப்பதற்கான முட்டுக் கட்டையாக இருக்கிறது. பஜாஜ் ஆட்டோவுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்தால், அதனை பின்தொடர்ந்து பியாஜியோ, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் உடனடியாக குவாட்ரிசைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றன.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
let's delve a little deeper into the world of the infamous three-wheeler, because there's a lot more to the rick than you may think.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark