"15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களுக்கு மறு பதிவு கிடையாது"... ஆஹா, விடிவு காலம் பிறக்க போகுது!!

15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களுக்கு மறு பதிவு செய்யக்கூடாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதனால், கொசு வண்டிபோல் புகையை கக்கி வரும் அரசு வாகனங்கள் விரைவில் வெளியேறும் சூழல் உருவாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அண்மையில், பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவை உயர்த்தியது. முன்னதாக, 90 சதவீத பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் என்ற வீதத்திலேயே கலக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இதனை 20/80 ஆக மாற்றியது. இதுமட்டுமின்றி இதற்கு முன்னதாகவும் பல்வேறு புதிய அறிவிப்புகளை காற்று மாசு சார்ந்து அரசு வெளியிட்டிருந்தது. அந்தவகையில், 2021-22 பட்ஜெட்டின்போது பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம் பற்றிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வெளியிட்டிருந்தார்.

15 ஆண்டுகள் பழைய வர்த்தக வாகனம் மற்றும் 20 ஆண்டுகள் பழைய தனி நபர் வாகனங்கள் கட்டாயம் ஃபிட்னஸ் சான்று பெற வேண்டும் என்பதே இந்த புதிய விதியின் அம்சமாகும். ஃபிட்னஸ் தர ஆய்வில் வாகனம் தேர்ச்சி பெற தவறினால் பல மடங்கு அபராதம் மற்றும் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆகையால், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முன்னரே பழைய வாகனங்களை தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் வர்த்தக மற்றும் பழைய வாகன பயன்பாட்டாளர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இந்த நிலையில் 15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கக் கூடாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு, மத்திய மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், உள்ளூர் அரசு துறைகள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள் என அரசு சார்ந்து இயங்கும் அனைத்து துறைகளுக்குமே பொருந்தும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியிருக்கின்றது.

ஆகையால், இப்புதிய பழைய வாகன அழிப்பு கொள்கையால் அரசு துறைகளில் பயன்பாட்டில் இருக்கும் 15 வயதுடைய வாகனங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. வரும் 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வரு இருப்பதாகவும் அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. ஆகையால், 15 ஆண்டுகள் பழைய அரசு வாகனங்கள் இனி மறு-பதிவு செய்ய முடியா சூழல் உருவாகியிருக்கின்றது.

காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இத்தகைய அதிரடி நடவடிக்கையை அமைச்சகம் எடுத்திருக்கின்றது. இந்தியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான பழைய மற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடிய வாகனங்கள் தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதில், போலீஸ் வேன்கள், தபால் வேன்கள், மாநில பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அடங்கும். இவற்றை வெளியேற்றுவன் வாயிலாகவே பெருமளவிலான காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும் என வாகன ஆர்வலர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதனடிப்படையிலேயே அனைத்து அரசுத்துறைகளுக்குமே பொருந்துகின்ற வகையில் ஓர் அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய வாகனங்களை வெளியேற்றுவது மட்டுமின்றி மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
No Re-Registration 15-Years Old Government Vehicles; Says MoRTH. Here IS Full Details. Read In Tamil.
Story first published: Saturday, March 13, 2021, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X